Monday, 7 November 2016

பேடியின்மை



"ஒரு பரப்பத்து"

நடத்துனரிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டான். கொளத்து பஸ் ஸ்டாண்டுல எடுத்த பஸ்சு, ஆனா இராமன்புதூர் வந்த பெறவு தான் டிக்கெட்டு எடுக்க முடிஞ்சது. இண்ணகு உள்ள கடைசி பஸ்ஸா இருந்தாலும், நல்ல கூட்டம். டிக்கெற்று எடுக்க இத்துர தேரம் ஆயிருகணா பாருங்க. 5D பஸ்சு எண்ணகும் இப்டி இருக்காது. இண்ணகு என்னோ நல்ல கூட்டம்.

இதை யொசித்துக் கொண்டிருக்கும்போதே டெலிபோன் பூத்துல அம்மவுடன் பேசியது ஞாபகம் வந்தது,

மோன, வெள வழியா வராத! IRE வழியா வா என்னா!. பேபட்டி கெடக்கும்.”,

சரி ஏ, நாங் வச்சுதேன் பஸ்சு இப்பம் எடுக்குவான்”,

மோன நிமலு, IRE வழியா வா செல்ல மோன”, தொலைப்பேசியை துண்டித்தான்.

இராஜாக்கமங்கலம் வந்தியாச்சு, கட எல்லம் அடச்சு கெடே! வேற பின்ன, மணி பதினொண்ணு ஆவ போறே!


இப்போது பேருந்தில் கூட்டம் பாதியாக குறைந்திருந்தது. ஜன்னல், அருகில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான் நிமல். நல்ல குளுந்த காத்து. மார்கழி மாசம் வேற. கண்ண மூடுனதுதான் தெரியும், மணவாளக்குறிச்சி வந்தியாச்சு! மணவாளக்குறிச்சில கரண்டு வேற இல்ல, வீட்ல கரண்டு இருக்கோ என்னோ?

IRE வந்து பஸ்சு நிண்ண ஒடன, எறங்கணுமணு உண்டு, ஆனா ஒரு மடி, இது தூரமல்ல! IRE ரோட்டுல நல்ல வெட்டம் இருந்தது. அது மிசேன்ல ஓடுத கரண்டு, டிரான்ஸ்பார்மர்ல இல்லாட்டாலும் IRE-எப்பனு கர்ண்டு இருக்கும். பஸ்சுல இருந்து யாரும் எறங்கேல. நொழக்குடில இருந்து யாரோ ஒரு ஆள் மாத்ரம் யாறுச்சு. ஆளு ரேவ தெரியேல.

பரப்பத்து வந்த ஒடன படபடா எறங்குனான் நிமலு. மணிய பாத்தா, பதினொணு அர. உருட்டோ உருட்டடாணு உருட்டுட்டான் பஸ்சுகாறன். ஒரு சாயாகட தொறந்திருந்தது. இந்த ராத்திரிலயும், ரோஸினுக அப்பா அங்க நிண்ணு சாயா குடிச்சுண்டு இருந்தாரு. இப்பதான் வந்தாரு போல, கேரளத்துல இருந்தி தொழில் முடிஞ்சி. சரி வீட்டுகு போலாமணி நடந்தான் நிமலு, வெள வழியா. அம்மா எவ்ளோ சொல்லியுங் கேக்காம போறான், வெள பாதேலோடி.

கொஞ்ச தொலவு நடந்த ஒடனே, இருந்த கொஞ்ச வெட்டமும் போச்சு. தென்னந்தோப்பு வழியா நடந்து வரும்போது, வானத்துல நிலா வெட்டம் கொஞ்சங்கூட இல்ல. குத்து இருட்டு. வழில நாவ கெடக்குமணு தெரியும். சீலாந்தி மரத்து கொப்புல இருந்து ஒரு கம்ப ஒடிச்சி கைல வச்சுருந்தான். சீலாந்தி மரத்துல பேய் இருக்குமணு சொல்லுவாவு. கொஞ்சம் பேடியதான் இருந்தது. பரபரா, வீரு வீரணு நடந்தான். அவன் வாறத கண்டி, மஜீதீ கெணத்துக கிட்ட கெடந்த பட்டிவ ஊளம்போட்டது.

"ஆண்டவரே, பேபட்டி கெடக்க கூடாது”, என்று வேண்டிக் கொண்டான்..

போன மாசந்தான், சாமத்துல வெள வழியா வந்த அனிக்க போத்திய பேபட்டி வெரட்டி, அவுரு தெக்க போய் கடல்ல சாடி தப்புனாரு. அதீ பெறவு எல்லாரும் சாமியாருட்ட பராதி சொல்லி, பஞ்சாயத்துல இருந்து வண்டி கொண்டு வந்தி பட்டிவள புடுச்சுண்டு போனாவு. இப்புடி புடுச்சுண்டு போன பட்டிவள லாறில யாத்தி, பாறசால கழிஞ்சு அமரவெளே கிட்ட, விடிய காலம் யாரையுங் காணாம கொண்டு அவுத்து உடுததா வேளம். நம்ம மக்களுக சுட்டுதலயையும், அக்றாமத்தையும் தெரியுதா? அப்ப அவனுவள பேபட்டி கடுச்சா ஒண்ணும் இல்லயாகும்?

இந்த தணுத்த சொருமண்ல நடக்க முடியேல. வேள தாண்டி ஊர்ல போய் எத்தணுமணா இன்னும் தொலவு போணும். பிதா, சுதன் போட்டுண்டி ஒரே ஓட்டமா ஓடலாம்ணு பாத்தா, நாயக சூந்து புடுச்சும்.

லே, நிமலு...”, யாரோ உளிச்சு கேக்குது. திரிஞ்சி பாக்க பேடிச்சி ஒரே ஓட்டமா ஓடுனான்.

மடிக்கெட்டிக வீட்டுல லைற்று கெடக்கத போல காணுது. கரண்டு வந்தியாச்சு போல. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வேகத்தை குறைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

மடிக்கெட்டி வீட்டுக வெளிய கசேரிய போட்டுண்டு இருந்தாரு.

என்ன நிமலு, இப்பமா வாற? இந்த இருட்டுல என்னத்துகு வெள பாதேல வந்த? வெள்ளானே போன கரண்டு இப்பந்தா வந்தது”, மடிக்கெட்டி அந்தோனி சொன்னார்.

நமுக்கு என்ன பேடி? இருட்டும் வெட்டமு எல்லாம் எனக்கு ஒண்ணுதான்!”

பேபட்டி கெடக்கும்! வாதம் கறங்கி நடக்க நேரம்!”

, நம்மள அடிச்சணுமணா, தம்பிராந்தா வரணும்”, என வியாக்கியானம் பேசிவிட்டு நிற்காமல் வேகமாக வீட்டுக்கு நடந்தான்.

வீட்டுக்குள் போனவுடன் அம்மா கேட்டார், அப்பா ஒன்ன தேடு வந்ததே, IRE கிட்ட?”

நாங் பாக்கேலே, சோற எடுத்து வைங்க, வயறு பௌச்சுது, என பேச்சை மாற்றிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

No comments:

Post a Comment