பெரியவிளை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் (நமக்கு தான் ஊரு முச்சூடும் சொந்தந்தானே, அதனால பெரியவிளை மக்கள் எல்லாரையும் பொதுவா சொந்தங்கள்ணு சொல்லலாம், தப்பில்ல!) தவக்காலத்தில், சுட்டெரிக்கும் கோடை நாளின் இரவில், தண்ணொளி வீசும் முழுநிலவின் கீழ் அமர்ந்து எழுதுகிறேன்.
திருச்சபை நமக்கு வழங்கிய ஆறு காலப்பிரிவுகளாகிய:
- திருவருகைக் காலம்
- கிறிஸ்து பிறப்பு காலம்
- பொதுக்காலம்-1
- தவக்காலம்
- உயிர்ப்பு காலம் (மற்றும்)
- பொதுக்காலம்-2
ஆகியவற்றுள் என் மனதுக்கு நெருக்கமானதாக நான் உணர்வது தவக்காலம் தான். அதற்கு காரணம் அதன் வழிபாட்டு முறைகளும், நெஞ்சையுருக்கும் பாடல்களும் தான் என நிதர்சனமாக சொல்லலாம். அதிலும் குறிப்பாக குருத்து ஞாயிறன்றும், பெரிய வெள்ளியன்றும் வாசிக்கப்படும் நற்செய்தி வாசகம் எனக்கு மிகவும் விருப்பமானது.
அந்த வாசகத்தில் இயேசு பேசும் சில வசனங்கள் பஞ்ச் வசனங்களாக (Punch Dialogues அல்லது முத்திரை வசனங்கள்) எனக்கு தோன்றுகிறது. திரு.ரஜினிகாந்தின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, பஞ்ச் வசனங்களை அடையாளம் கண்டுகொள்வது கடினமா என்ன?
நான் இரசித்த கிறிஸ்துவின் பஞ்ச் வசனங்களை இந்த கட்டுரை வாயிலாக உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
முதலாவது காட்சி:
படைவீரர்கள் இயேசுவை கைது செய்து தலைமை குருவாய் இருந்த கயபாவிட கொண்டு செல்கின்றனர். அப்போது இயேசுவின் போதனைகளை குறித்து கயபா எள்ளி நகையாடுகிறான். அதை கேட்ட இயேசு, தன்னிடம் அதை பற்றி கேட்பதை விட, தான் பேசியதை செவிமெடுத்தவர்களிடம் கேட்டுப்பாரும் என மறுமொழி கூறுகிறார். இந்த பதிலை கேட்டு ஆத்திரம் அடைந்த காவலர்களில் ஒருவன், தலைமை குருவிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறி இயேசுவின் கன்னத்தில் அறைந்துவிடுகிறான். இதற்கு பிறகு தான் பஞ்ச் வசனம் வருகிறது,
நான் தவறாக பேசியிருந்தால், தவறு என்னவெனக் காட்டும். சரியாக பேசியிருந்தால், ஏன் என்னை அடிக்கிறீர்? [யோவான் 18:23]
என இயேசு சொல்கிறார். இதைக் கேட்ட அந்த காவலன் பதில் ஏதும் கூற முடியாமல் திணறுகிறான். இந்த வசனத்தை கூர்ந்து கவனித்தால், தவறு நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும் அதை தட்டிக் கேட்கும் துணிச்சல் இயேசுவுக்கு அதிகமாக இருந்தது புரியும்.
இரண்டாவது காட்சி:
கயபாவிடமிருந்து இயேசுவை கூட்டிக்கொண்டு பிலாத்துவிடம் செல்கிறார்கள். பிலாத்து அந்த வழக்கின் தன்மையை அறிய, இயேசுவிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறான். இயேசு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்கிறார். பொறுமை இழந்த பிலாத்து, இயேசுவிடம், "நீ என்னுடன் பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்கு தெரியாதா?”, என கர்வத்துடன் சொல்கிறான்.
இதைக் கேட்ட உடனே இயேசு தலையை உயத்தி, அடிபொழியான பதில் ஒன்றை சொல்கிறார்.
மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மீது எந்த அதிகாரமும் கிடையாது. [யோவான் 19:11]
நாமும் பல நேரங்களில் கர்வத்துடனே பேசுகிறோம். அப்போதெல்லாம், மேலுள்ள இயேசுவின் பஞ்ச் வசனத்தை நினைவில் கொண்டால், இறைவன் முன் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது தெளிவாய் புரியும்.
ஒவ்வொரு முறை திருவிவிலியத்தை படிக்கும்போதும், பல்வேறு கோணங்களில் பொருள் கொள்ளச் செய்து, அதில் உள்ள வசனங்கள் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இந்த கட்டுரை அனைவருக்கும் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.
No comments:
Post a Comment