பெங்களுரு இரயில் நிலையம்.
"யாத்ரியோன் கிருப்பியாத்தியான் மே", என்று
பேரிரைச்சலையாய் வந்து கொண்டிருந்த ஒலியையும் கவனிக்காமல், இரு வாலிபர்கள் பிருந்தாவன் அதிவிரைவு வண்டியில் அமர்ந்திருந்தனர். பண்டங்கள் விற்பவர்களும், சக பயணிகளும் அங்கும் இங்கும் சென்றவாறு இருந்தனர். அப்போது ஒரு 14-15 வயது மதிக்கத்தக்க சிறுவன் இரயிலில் கஷ்டப்பட்டு ஏறினான். அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையும், கால் சட்டையும் நிறம் முற்றிலுமாய் மாறி கிட்டத்தட்ட கட்டன் சாயா போல் இருந்தது. தலைமுடி அழுக்கேறி சவைத்து துப்பிய கருமபுச் சக்கை போல இருந்தது. இரு கால்களையும் இழந்தவனாய் ஈந்து வந்து கொண்டிருந்தான். இரயிலில் இருந்த பயணிகள் யாரும் அவனுக்கு உதவ முன்வருவதாய் இல்லை. பெரும்பாலானோர் அவனை
கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதை கவனித்த சூரியா,
"பாவம், அவன பாரு. ஒன்னட்ட சில்லற இருக்கேது?" என்றான்.
தேவாவோ, "சில்லற இல்ல. பத்து ருவாய்க்கு ஒரு நோட்டுதான் இருக்கி".
"அத இங்க எடு. பாவங்களுக்கு தானே இருக்கட்டு", என சூரியா சொன்னவுடன் பணத்தை தேவா எடுத்து நீட்டினான். அந்த பைசாவ பிச்சை போட்டவுடன், இரண்டு பேருக்கும் ஒரு மன நிறைவு.
"எல்லாங் கல் நெஞ்சுவ. ஒருத்தனும் அஞ்சு பைசா போடாட்டாவே", என சக பயணிககளை தங்களுக்குள் திட்டிக் கொண்டனர் இருவரும். இதற்குள்ளாக அந்த பையன் அவர்கள் இருந்த S3 பெட்டியை விட்டு இறங்க தயாரானான். தேவா,
"வண்டி இன்னும் எடுக்கேலே, ஒரு குப்பி தண்ணி வாங்குண்டு வா." என சூரியாவிடம் சொன்னான். வெளியே சென்று தண்ணி வாங்கிக் கொண்டு திரும்பும்போது, அந்த பையன் S5 பெட்டியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். ஒரு நிமிடம் சூரியாவின் முகம் கறுத்து விட்டது. ஏதோ தனக்குள் சொல்லிக் கொண்டு திரும்பி நடந்தான்.
குளச்சல் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு பேக்கறி.
"கொழந்தோளுகு ரண்டு பெப்சு வாங்குண்டு போலாம்", என்றாள் திருமதி.
இரமணி. "முட்ட பெப்சு தானே, வாங்கியாச்சு", என்றான் திரு.மாலன். பேக்கறியில் அவ்வளவாய் கூட்டம் இருக்கவில்லை.
"மிச்சர் ஒரு கிலோ",
"இப்ப சாப்புடுதுகு ரண்டு கட்லெட்டு தாங்க",
"எல்லாரும் ஐநூறு ருவாய நீட்டுனா எப்புடி, சில்லற இல்ல" என மட்டும் சில குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு அம்மா, மூன்று வயது மதிக்கத்தக்க தன் குழந்தையை கொண்டு உள்ளே வந்தாள். குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்தது.
"அண்ணா, கொழந்த பசில கரையுது ஒரு பத்து ரூவா இருந்தா தாங்க. அண்ணா... அண்ணா..", என்று அங்குள்ளவர்களை கேட்டுக் கொண்டிருந்தார் அந்த அம்மா.
உடனே இரமணி, "ஏ, ஒரு இருவது ரூவா எடுத்து அந்த பெம்பிளை கைல குடுங்க", என்றயாள்.
அதற்கு அவள் கணவன் மாலன், "சும்மா இரி. இது பைசா வாங்குதுகு உள்ள ஏற்பாடாகும. வேணுமணே சின்ன மக்கள கரச்ச உண்டாக்கி பைசா வாங்குத ஐடியா", என்றான்.
"பாத்தா பாவமா இருக்கி. குடுங்க.. ஏ", என்று மனைவி வற்புறுத்தியதால் இருபது ரூபாயை எடுத்து அந்த அம்மாவிற்கு மாலன் கொடுத்தான். அந்த அம்மா அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கடைக்காரரிடம்,
"அண்ணா, கொழந்தைகு ஒரு பிஸ்கெட்டும், பப்சும் தாங்க", என சொல்லி வாங்கி, குழந்தைக்கு அங்கேயே ஊட்டினார்.
"நம்ம இப்ப குடுக்கேலேணா இந்த பாவம் எல்லாம் யாருக்கு" என இரமணி கூற, மாலனும் சரி என்பது போல தலை ஆட்டினான்.
இந்த இரண்டு நிகழ்வுகளில். எது சரி? எது தவறு? முதல் நிகழ்வில் தேவா பிச்சை போட்டது சரியா? தவறா?
நாம் எல்லாரும் இது போல் ஒரு நிகழ்வில் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒரு முறை
நகைச்சுவை நடிகர் கலைவாணருக்கு இது போல் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. கலைவாணரின் உறவினர் ஒருவர் அவரிடம்,
"அந்த பிச்சைக்காரனுக்கு பைசா போடாத. அவன் கண்ணு தெரியல என்று சொல்லி உன்ன ஏமாத்துறான்" என்றார்.
அதற்கு அவர், "நான் போட்ட நாலணாவ கொண்டு போய் அவன் என்ன வீடயா கட்ட போறான். ஏமாத்துனா ஏமாத்துண்டு போறான்", என்றார்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்வள்ளுவன் சொன்னதை போல், பயனை எதிற்பாராமல் செய்யும் உதவி சிறந்ததா? அல்லது
நன்மை கடலின் பெரிது
பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பது சிறந்ததா? என்னைப் பொறுத்த வரையில் சூரியா, தேவா, இரமணி மற்றும் கலைவாணர் செய்ததே சரி (பயனை எதிர்பாராமல் செய்த உதவி).
உங்களுக்கு? சிந்தித்து முடிவை நீங்களே எடுங்கள்.
No comments:
Post a Comment